மெல்போர்ன்: மெல்போர்னில் 26-ம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் 'பாக்ஸிங்டே' டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் 7-வயது சிறுவன் சேர்க்கப்பட்டுள்ளார். அரிதான இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆர்ச்சி சில்லர் என்ற சிறுவன் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளார்.
ஆர்ச்சி சில்லர் பிறக்கும் போதே இதயவால்வில் பல்வேறு சிக்கல்களோடு பிறந்தவன். 7 வயதுக்குள் அவனுக்கு பல்வேறு இதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுவிட்டன. ஆர்ச்சி சில்லரின் உடல்நிலை காரணமாக இயல்பான குழந்தைகள் போல் அவனால் வெளியில் ஓடி, ஆடி விளையாட முடியாது. இதனால் பள்ளிக்கூடம் செல்வதைக் கூட ஆர்ச்சி சில்லர் தவிர்த்து வீட்டில் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வருகிறான்.
ஆனால், ஆர்ச்சி சில்லருக்கு கிரிக்கெட் என்றால் ஆசை, அதிலும் ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம் மிகவும் பிடிக்கும். ஒருநாள் ஆர்ச்சி சில்லரின் தந்தை அவனிடம் 'உன்னுடைய ஆசை என்ன' என்று கேட்டுள்ளார். 'தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக வேண்டும்' என்று ஆர்ச்சி சில்லர் கூறியுள்ளார். இதையடுத்து, ஆர்ச்சி சில்லரின் தந்தை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்திடம் கூறி ஆசையை நிறைவேற்றக் கோரியுள்ளார்.
சிறுவன் ஆர்ச்சி சில்லரின் ஆசையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகமும் நிறைவேற்ற முன்வந்தது. இதையடுத்து, மெல்போர் யாரா பார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் 15 பேர் கொண்ட அணியில் ஆர்ச்சி சில்லர் சேர்க்கப்பட்டு, மெல்போன்ர் டெஸ்ட் போட்டிக்கு துணைக் கேப்டனாகவும் பொறுப்பேற்பார் என்று அறிவித்தார்.
இந்த நிகழ்ச்சியிலும் ஆர்ச்சி சில்லரை அறிமுகம் செய்து வைத்து அவரை கோலியும், பெய்னும் மகிழ்ச்சிப்படுத்தினார்கள். ஆஸி. பயிற்சியாளர் லாங்கர் கூறுகையில், “வாழ்வின் கடினமான நாட்களை சில்லர் கடந்திருக்கிறான். அவனின் முகத்தில் மகிழ்ச்சியை காண இது ஒரு வாய்ப்பாக அமையும்” எனத் தெரிவித்தார்….



0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்